படியளக்கின்றார்....               

ein Bild

இந்திரப்பர்வத்தின் உச்சியிலே இருந்தவாறே ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள் உலக மாதாவாகிய அன்னை பார்வதிதேவி. "இவ்வுலகில் வாழ்கின்ற அனைத்து உயிர்களுக்கும் எம் இறைவன் எவ்வாறோ படியளந்து விடுகின்றாரே. அவருடைய அருளாற்றல்தான் என்ன சக்தி வாய்ந்தது" என்பதுதான் அந்த சிந்தனை. உலகின் எல்லாவுயிர்களுக்கும் தலைவனாகிய நம் இறைவனின் இச்செயற்பாட்டை சோதிக்க விரும்பினாள் அன்னை பார்வதிதேவி.
ஒருநாள் இறைவனுக்கத் தெரியாமல் ஒரு பூச்சியைப் பிடித்து தன் கமண்டலத்துக்கள் அடைத்து வைத்து விட்டு. "இந்தப் ஜீவராசிக்கு நம் இறைவன் எவ்வாறு இன்று படியளக்கின்றார் என்று பார்த்துவிடுவோம்" என கங்கணம் கட்டிக் கொண்டாள் அன்னை பார்வதி.அன்றைய நாள் மாலைநேரம் வந்தது. இருள் சூழ ஆரம்பித்தது. தனது கடமையாகிய இவ்வுலக ஜிவராசிகளுக்கு படியளக்கும் செயற்பாட்டினை இனிதே நிறைவேற்றிய பெருமிதத்தோடு தியானத்தில் அமர்ந்திருந்தார் எமது சந்திரசேகரப் பெருமான். "இவரை இன்று ஒரு கை பார்த்துவிட வேண்டுமென்ற ஒரு வைராக்கியத்துடன் இறையனாரின் அருகில் வந்து சேர்ந்தாள் உலக மாதாவாகிய அன்னை பார்வதி தேவி. கையில் கமண்டலம் முகத்தில் ஏளனப்புன்னகை எதையோ சாதித்துவிட்ட பெருமையுடன் இறைவனிடம் கதையைத் தொடுத்தாள் அன்னை. " உங்கள் அன்றாட வேலைகளில் ஒன்றான உலக ஜீவராசிகளுக்கு படியளக்கும் அச்செயற்பாட்டை நீங்கள் பூரணமாக நிறைவு செய்தீர்களா? எனக் கேட்ட அன்னையின் முகத்தை இறைவன் நிமிர்ந்து பார்த்தார்.பார்வதியின் இக்கேள்வியில் ஏதோ ஓர் அர்த்தம் மறைந்திரப்பதை தெரிந்து கொண்டாலும் தன் பணி இனிதே நிறைவெய்தியதாகவே பதிலளித்தார் இறைவன். "நீங்கள் இன்று ஒரு உயிருக்கு படியளக்கத் தவறிவிட்டீர்கள்." என்றாள் அன்னை பார்வதி. "இல்லையே எல்லாவுயிர்களுக்கும் தானே இன்று நான் படியளந்தேன்" என பார்வதியின் கூற்றை மறுத்த இறைவனுக்கு " நீங்கள் இன்று படியளக்கத் தவறியதால் இந்தக்கமண்டலத்துக்குள் ஒரு ஜீவன் இறந்து விட்டது.." என்ற வாறே கமண்டலத்தை திறந்து இறைவனுக்குக் காட்டினாள். இறைவன் எட்டிப்பார்த்த பின்பு " இல்லையே அந்த ஜீவன் உயிருடன் தானே இருக்கிறது " என்றார். இதைக்கண்ட அன்னை ஆச்சரியம் அடைந்தாள்."எப்படி கமண்டலத்துக்குள் ஒருநாள் முழுவதும் இருந்த இந்த ஜீவனுக்கு உங்களால் படியளக்க முடிந்தது?" என்று வியப்போடு இறைவனைக் கேட்டாள்.இதற்கு இறைவன் சொன்ன பதில் பார்வதியை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. " வேறு ஒன்றுமில்லை நீ எப்போது இந்தக் கமண்டலத்தைத் திறந்தாயோ அப்போதே அதற்குப் படியளந்து விட்டேன்" என்றார் இறைவன்.
இந்த உலகத்தில் வாழ்கின்ற எந்த உயிரினமும் அவன் கண்களுக்குத் தப்ப முடியாது. உலகின் ஒவ்வொரு ஜீவனுக்கும் படியளக்க வேண்டிய நம் இறைவனின் கருணையையும் நாம் அறியாமல் இருக்க முடியாது. உலகின் எந்த மூலையிலும் இறைவன் ஒவ்வொரு ஜீவனுக்கும் ஒவ்வொரு நாளும் ஏதோ ஒருவகையில் உணவளிக்கின்றான்.

         திருத்தலப் புகைப்படங்கள்-1 திருவாதவூர்

மதுரைக்கு அருகில் 22 கிமி தொலைவில் உள்ள இந்த ஊரில்தான் "திருவாசகம்" மற்றும் "திருக்கோவையாரு" இயற்றிய மாணிக்க வாசகர் பிறந்தார்.அதனால் வாதவூரார் என்றும் அழைக்கப் படுகிறார்.

இங்குள்ள சிவன் "வாதபுரீஸ்வரர்" அதாவது வாயுவால் வழி படப் பட்டவர் என்று வழங்கப் படுகிறார்.

இங்குள்ள சிவன் ஆலயத்தில் சனி பகவன் சந்நதி தனியே அமைந்திருப்பது பிரசித்தி.சனி பகவான் வாத நோயால் அவதிப் பட்ட போது இங்குள்ள சிவனை பூசித்து அதனால் வாதநோய் தீர்ந்ததால் "வாதவூர்" என்று தலம் பெயர் பெற்றதாகவும் சொல்கிறார்கள்.இன்றும் மக்கள் நோய் தீர இக் கோவிலுக்கு வருகின்றனர்.

கோவில் முகப்பு
கோபுரம்

மாணிக்கவாசகர் பக்தியியினால் குதிரை (பரி) வாங்க அரிமர்தன பாண்டிய மன்னன் தந்த காசை "திருப்பெருந்துறை" திருத்தலப் பணிகளுக்கு செலவு செய்து விட அதை அறிந்து கோபம் கொண்ட மன்னன் அவரை சிறையில் அடைத்து தண்டிக்கிறான்.

பக்தனை காக்க சிவ பெருமான் காட்டிலுள்ள நரிகளைப் பிடித்து பரியாக மாற்றி, தேவ கணங்களை பாகர்களாக்கி தானே குதிரை சேவகனாகவும் குதிரை சாத்தோடு வந்ததாய் திருவிளையாடல் புராணம் சொல்கிறது. இதை

"குதிரையைக் கொண்டு குடநா டதன் மிசைச்
சதுர்படச் சாத்தாய்த் தானெழுந் தருளியும்"

"அரியொடு பிரமற் களவறி யொண்ணான்
நரியைக் குதிரை யாக்கிய நன்மையும்"

"மதுரைப் பெருநன் மாநக ரிருந்து
குதிரைச் சேவக னாகிய கொள்கையும் "


என்றெல்லாம் பாடியதிலிருந்து அறியக் கிடைக்கிறது

        திருத்தலப் புகைப்படங்கள்-2 திருவண்ணாமலை

திருவண்ணாமலை என்றாலே பெரும்பாலானோருக்கு அருணாசலேச்வர்தானே ஞாபகத்திற்கு வருவார்..ஆனால் திருவில்லிபுத்தூருக்கு அருகில் ஒரு திருவண்ணாமலை உள்ளது...இது ஒரு வைணவத்தலம்.இங்கு மஹாவிஷ்ணு வேட்டைப்பெருமாளாக கத்தி முதலிய ஆயுதங்களுடன் ஸ்ரீனிவாசர் என்ற நாமகரணத்துடன் நின்ற திருக்கோலத்தில் காட்சியளிக்கிறார்.
இது மேற்குமலைத் தொடரின் அடிவாரத்தில் சிறு மலை மீதமைந்த கோவில் ..சுமார் 200 படிக்கட்டுக்கள் ஏறி கோவிலுக்கு செல்ல வேண்டும்
கோவிலிலிருந்து பார்த்தால் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்கள் அழகுறத் தெரியும்

                     கோவில் கோபுரம்

               கோவிலுக்கு செல்லும் பாதை